ஜோர்ஜ் டவுன் , ஜூன் 16 -பினாங்கு ரெலாவ்வில் ( Relau ) உள்ள அடுக்ககத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனால் கத்தியால் குத்தப்பட்ட 67 வயது பெண்மணி ஒருவர் மரணம் அடைந்தார். குடும்பத்தின் கடைசி மகனான அந்த சந்தேகப் பேர்வழி நேற்று மாலை மணி 5 மணியளவில் மேற்கொண்ட அந்த செயல் குறித்து தனது சகோதரனிடம் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக பினாங்கு Timur Laut போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரஸ்லாம் அப்துல் ஹமிட் ( Razlam Ab Hamid ) கூறினார். அந்த நபரின் சகோதரர் இச்சம்பவம் குறித்து மேல் நடவடிக்கைக்காக போலீசுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து 56 வயதுடைய சந்தேகப் பேர்வழி அவனது வீட்டில் கைது செய்யப்பட்டான்.
அந்த நபர் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே தனது தாயாரின் வீட்டிற்கு சென்று தங்கிவந்ததாகவும் இதர நாட்களில் Batu Maung-கிலுள்ள தனது மூத்த மகனின் வீட்டில் இருந்துவந்துள்ளான். இதற்கு முன் Batu Maung- கில் தங்கியிருந்த அவனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொலை செய்யப்போவதாக மிரட்டி வந்ததோடு கடந்த ஆண்டு ஜாலான் பேராவில் மனநல மருத்துவ வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகவும் ரஸ்லாம் கூறினார். தண்டனைச் சட்டத்தின் 302ஆவது விதியின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.