Latestமலேசியா

புதிய உச்சம் தொட்ட அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு விவரங்களை அரசாங்கம் அடுத்த மாதம் வெளியிடுகிறது

கோலாலம்பூர், மார்ச்-22, கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத் தொகையான 329.5 பில்லியன் ரிங்கிட்டின் துல்லியப் புள்ளி விவரங்களை அரசாங்கம் அடுத்த மாதம் வெளியிடும்.

அவை தற்போது இறுதிச் செய்யப்பட்டு வருகின்றன; முழுமைப் பெற்றதும் ஏப்ரல் முதல் வாரத்தில் அவை அறிவிக்கப்படும் என அனைத்துலக வாணிப- தொழில் துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.

அத்தொகையானது, நாட்டு வரலாற்றிலேயே பதிவான மிக உயரியத் தொகையாகும்; அதுவும் 2022-ல் பதிவானதை விட 23% அதிகம் என்றார் அவர்.

“ஆண்டுக்கு ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என இதுநாள் வரை அதனை மக்களுக்கு அறிவித்து வந்துள்ளோம்; வரும் காலங்களில் இன்னும் அடிக்கடி அவ்விவரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என Bernama தலைமையகத்தில் Concorde Club ஏற்பாட்டில் நடந்த சந்திப்பில் சாஃவ்ருல் கூறினார்.

இந்த மடானி அரசாங்கம் வெளிப்படைத்தன்மையோடு இருக்க விரும்புவதாகக் கூறிய அமைச்சர், இதன் மூலம் என்ன நடக்கிறது என்பதையும் மொத்த முதலீடுகள் எங்கிருந்து, எப்படி வருகின்றன என்பதையும் பொது மக்கள் தெரிந்துக் கொள்ள வாய்ப்பேற்படும் என்றார்.

2023-ல் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் மொத்தம் 5,101 திட்டங்களை உட்படுத்தியுள்ளன.

அது, மக்களுக்கு கூடுதலாக 1 லட்சத்து 27 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என தெங்கு சாஃவ்ருல் சொன்னார்.

அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டில் மலேசியா புதிய உச்சத்தைத் தொட்டிருப்பது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த மாதம் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

எனினும், அது ஒரு வெற்று அறிவிப்பு என எதிர்கட்சிகள் மட்டுமின்றி அரசாங்கத்தில் ஓர் அங்கமான அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்களும் குறைக் கூறிய நிலையில், அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த புள்ளி விவரங்களை அரசாங்கம் வெளியிடவிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!