
பத்து காஜா, ஆகஸ்ட் 20 – வீட்டின் அருகே பூனைக்குட்டியை அலுமினியத் துடைப்பத்தால் பலமுறை தாக்கிய சம்பவம் தொடர்பாக, ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்து காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் நூர் ஏஹாவான் முஹமட் (Md Noor Aehawan Mohammad) கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சந்தேக நபர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விசாரணையில், பூனைக்குட்டி தனது வாகனத்தின் முன்பகுதி எஞ்சின் பகுதியில் நுழைந்ததால், எஞ்சினை இயக்கும்போது அதற்கு ஆபத்து ஏற்படுவதுடன் வாகனத்துக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அதைத் தாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
தாக்குதலுக்குப் பிறகும் பூனைக்குட்டி உயிருடன் இருந்ததுடன், அண்டை வீட்டினர் அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் மற்றும் விலங்குகள் நலச் சட்டம் ஆகிய 2 சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



