Latestமலேசியா

பெங் ஹோக் மரணத்தைக் கொலை வழக்காக விசாரிக்கக் கோரும் மனுவுக்கு AGC எதிர்ப்பு

கோலாலம்பூர், நவம்பர் 2 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்குப் பின்னர் உயிரிழந்த தெங் பெங் ஹோக்கின் (Teoh Beng Hock) மரணத்தை கொலை வழக்காக விசாரிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த நீதிமன்ற மறுஆய்வு மனுவுக்கு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு, நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லையென AGC தரப்பு வாதிட்டது. ஆனால், குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையின் விசாரணை வகைப்பாடு குறித்த தெளிவான தகவல் கடந்த ஜனவரி 20ஆம் தேதிதான் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி AGC-யின் எதிர்ப்பு குறித்த தீர்ப்பை நவம்பர் 17ஆம் தேதி அறிவிக்கவுள்ளார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, பெங் ஹோக் மரணம் தொடர்பான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டு மே மாதம், விசாரணை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டதாகவும், மேற்கொண்டு நடவடிக்கை தேவையில்லை (NFA) என AGC முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.

பெங் ஹோக் 2009ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஷா ஆலமிலுள்ள பிளாசா மஸ்ஸலாம் (Plaza Masalam) கட்டிடத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம், அவரது மரணம் அடையாளம் தெரியாத ஒருவர் அல்லது பலரின் சட்டவிரோதச் செயலால் நிகழ்ந்ததாகத் தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அவரது மரணத்தை கொலை அல்லது கொலை நோக்கமின்றி மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக விசாரிக்க குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!