பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8 – சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, வணிக வளாகம் ஒன்றின் வாகனம் நிறுத்துமிடத்தில், கோடாரிகளை ஏந்திய நான்கு கொள்ளையர்கள், 1.2 மில்லியன் மதிப்புள்ள நகைகள் அடங்கிய பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றனர்.
கடந்த சனிக்கிழமை, இரவு மணி 7.40 வாக்கில், நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, கொள்ளையர்கள், துப்பாக்கியை ஒத்த பொருளை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
தந்தை மற்றும் உறவுக்கார பெண் ஒருவருடன், தனது நிறுவனத்துக்கு சொந்தமான நகைகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு நடந்து சென்ற ஆடவர் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து, முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்கள் நகைப் பையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றதாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் ஷாருல்நிசாம் ஜாபர் (Shahrulnizam Jaafar) தெரிவித்தார்.
முன்னதாக, அவ்வாடவரின் வருகைக்காக, கொள்ளையர்கள் காரில் காத்திருந்தது, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக தெரிய வந்துள்ளது.
எனினும், அச்சம்பவத்தில், நகை பையை பறிகொடுத்த ஆடவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில், விசாரணை தொடரும் வேளை ; இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை.