
கோலாலம்பூர், ஜூன் 17 – இந்த நாட்டில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை முறையானது, தெளிவான மற்றும் வெளிப்படையான செயல்முறை திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இது தகுதி மற்றும் நிறுவப்பட்ட தகுதித் தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது என உயர்க் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர் (Datuk Seri Zambry Abdul Kadir) வலியுறுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு உயர்கல்விக்கான அணுகல் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் பொதுப் பல்கலைக்கழகங்கள் எப்போதும் உறுதியாக உள்ளன என்று அவர் கூறினார்.
சட்டவிரோத அல்லது முறையற்ற வழிகள் மூலம் 30,000 முதல் 60,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்கிறார்கள் என்று கூறுபவர்கள், தங்கள் கூற்றை ஆதரிக்க ஆதாரங்களையும் உண்மைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்
என அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளை எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக முன்வைக்க முடியாது. கல்வி உலகில், எண்கள் என்பவை வெறும் எண்கள் அல்ல. குறிப்பிடப்படும் ஒவ்வொரு புள்ளிவிவரத்திற்கும், அதன் உண்மைத்
தன்மையை ஆய்வு செய்து பரிசோதிக்கக்கூடிய ஒரு ஆதாரம், வழிமுறை மற்றும் அடிப்படை இருக்க வேண்டும் என ஸம்ரி தெரிவித்தார்.
இந்தக் கருத்தின் அடிப்படையில், வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, பல பொதுப் பல்கலைக்கழகங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த நடவடிக்கை, விமர்சனத்திற்கான வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதோ அல்லது கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்ல என ஸம்ரி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



