Latestமலேசியா

போலீஸ் காருக்குத் தீ வைத்தவன் டிக் டோக் விளம்பரப் பிரியனாம்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 16 – முத்தியாரா டாமான்சாரா MRT ரயில் நிலையத்தில் உதவி போலீஸ் காருக்கு தீ வைத்த ஆடவன் ஒரு விளம்பரப் பிரியன் என தெரிய வந்துள்ளது. சமூக ஊடகங்களில் தாம் வைரல் ஆக வேண்டும்; அனைவரும் தம்மைப் பற்றி பேச வேண்டும் என்ற எண்ணத்திலேயே தான் அவ்வாறு செய்ததாக 25 வயது அவ்விளைஞன் போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளான்.

குறிப்பாக டிக் டோக்கில் தனது வீடியோவை ஏராளமானோர் பார்த்து பரவசமடைந்து, அதன் மூலம் தாம் புகழ் பெற வேண்டும் என்பதையே அவன் ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா ஓ.சி.பி.டி முகமட் ஃபாக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

மூன்றாண்டுகளாக “p-hailing” ஓட்டுநராக இருந்து வரும் அவ்வாடவன் சம்பவத்தின் போது போதைப் பொருள் உட்கொண்டதும் அம்பலமாகியுள்ளது. போலிஸ் காருக்குத் தீ வைக்க அவன் பயன்படுத்திய பெட்ரோல் குண்டு அடங்கிய பாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஃபாக்ருடின் சொன்னார்.

வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த அச்சம்பவம் சதிநாச வேலையாக வகைப்படுத்தப்பட்டு, குற்றவியல் சட்டம் 435-ஆவது பிரிவில் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பேருந்து நிறுத்துமிட சுவரைச் சேதப்படுத்தியது போதாதென்று, போலிஸ் காருக்கும் தீ வைத்து விட்டு, அதன் அருகில் சிரித்துக் கொண்டே தாம் நிற்கும் வீடியோ ஒன்றை அவ்வாடவன் முன்னதாக டிக் டோக்கில் பதிவேற்றியிருந்தான்.

போலிஸ் காருக்குத் தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் #polistakdekeje என்ற ஹேஷ்டேக்குடன் சமூக ஊடகத்தில் அவ்வீடியோவை பகிர்ந்தன் மூலம், தனது ‘influencer’ கனவில் அவனே மண்ணைப் போட்டுக் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!