Latestமலேசியா

மக்களவையில் முதல் நாளே கூத்து; வெளியேற்றப்பட்ட பெண்டாங் MP

கோலாலம்பூர், பிப்ரவரி-27 – நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் MP-யாக, எதிர்கட்சியைச் சேர்ந்த பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிம் திகழ்கிறார்.

அவை விதிகளைப் பின்பற்றத் தவறியதாகக் கூறி, தேசியக் கூட்டணி (PN)-யைச் சேர்ந்த டத்தோ அவாங்கை சபாநாயகர் நான்கு நாட்களுக்கு இடைநீக்கமும் செய்தார்.

இதையடுத்து 4 நாட்களுக்கு அவர் மக்களவைக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் இன்று அறிவித்தார்.

அரச உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்மொழிந்தது தொடர்பில் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியதை அடுத்து, முன்னதாக அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

அத்தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் தகவல் எதிர்கட்சியினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாதது ஏன் என பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைக் கொறடா டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் கேள்வி எழுப்பினார்.

இதனால் அவருக்கும், சட்ட சீர்த்திருத்த விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மானுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் மேலும் சில எதிர்கட்சி எம்பிக்களும் சேர்ந்துக் கொள்ள, ஒரே களேபரமானது.

பொறுமையிழந்த சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல், கடைசியில் பெண்டாங் எம்பியை அவையில் இருந்து வெளியேற்றி, அவரை இடைநீக்கமும் செய்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

15-ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான முதல் கூட்டத் தொடரை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று தொடக்கி வைத்து உரையாற்றிய போது, MP-க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பது தொட்டும் பேசியிருந்தார்.

சதா கத்திக் கூச்சல் போட்டு, நாடாளுமன்றத்தைப் ‘போர்க்களமாக்கி’ விடாதீர்கள் என்றெல்லாம் அவர் எச்சரிக்கை விடுத்துச் சென்ற மறுநாளே MP-கள் இப்படி நடந்துக் கொண்டிருப்பது வேதனைத் தருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!