மலாக்கா, ஜூன் 24 – முதலை ஒன்று ஆட்டை இழுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்கு பின்னர், கிளேபாங் (Klebang) கம்போங் தெங்கா (Kampung Tengah), புலாவ் கடோங்கில் (Pulau Gadong), வசிக்கும் மக்கள் , நேற்று மீண்டும் அதேபோன்ற சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று மாலை மணி 6.30 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சுங்கை ஆயிர் சாலாக் (Sungai Ayer Salak) ஆற்றங்கரையோரத்தில் புல் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆண் ஆட்டை, செப்பு முதலை ஒன்று இழுத்துச் சென்றதை கண்டதாக, தனது நண்பரும், தொழிலாளியும் தகவல் வழங்கியதாக, 28 வயது கால்நடை வளர்ப்பாளரான முஹமட் ஹபீஸ் ஹைகல் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த மாதம் 14-ஆம் தேதி, ஹபீஸின் பெண் ஆடு ஒன்றை முதலை இழுத்துச் சென்ற வேளை ; இம்முறை அவரது போயர் (Boer) ரக ஆண் ஆடு பலியாகியுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹபீஸ் சொன்னார்.
ஆடு மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட ஆற்றங்கரையோரத்தில் சிறார்களும் விளையாடுவது வழக்கமாகும். அதனால் அசாம்பாவிதச் சம்பவங்களை தவிர்க்க, PERHILITAN – தேசிய பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, ஆயிர் சாலாக் ஆற்றிலிருந்து திடீரென வெளிப்படும் முதலை ஒன்று, ஆட்டை விழுங்குவதை காட்டும் 50 வினாடி காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.