
சிரம்பான் செப் 6- மலாக்கா மாநிலத்தில் இந்தியச் சமூகத்தினர் நீண்ட காலமாக எதிர்கொண்டு வந்த ஈமக்காரிய நிலப் பிரச்சினைக்கு மாநில அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையின் மூலம் தற்போது நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ மகாதேவன், அதன் பின்னர் பாக்காதான் ஹாராப்பானைச் சேர்ந்த ஆட்சிகுழு உறுப்பினர், தற்போதைய தேசிய முன்னணி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சண்முகத்தின் முயற்சியால் இது சாத்தியமானதாக அவர் கூறினார்.
இத்திட்டத்திற்காக சுமார் 10,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் சொந்தச் செலவில் சுமார் RM100,000 நிதியில், 16×16 அடி அளவில் 3 ‘கசீபோ’ (Gazebo) வகை கூடாரங்கள் கட்டப்பட்டு, பொதுமக்கள் ஈமக்காரியங்களைச் செய்வதற்கான முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதற்கான வரைபடம் மற்றும் மாநிலச் செயற்குழுவின் (MMKN) முறையான அங்கீகாரம் பெறப்பட்டுவிட்டதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
இதனிடையே மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ரவுஃப் யூசோ மற்றும் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோரின் கலந்தாலோசனையால் இத்திட்டம் வெற்றிகரமாகச் சாத்தியமாகியுள்ளதாகக் கூறிய டத்தோ சண்முகம் அதற்காக தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.



