
கோலாலம்பூர், செப்டம்பர்-22,மலேசிய வரலாற்றிலேயே ஆகக் கூடுதல் தொகையாக, “H 1” எனும் சிறப்பு வாகனப் பதிவு எண் 10.77 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம் போயுள்ளது.
மலேசிய தினத்தை முன்னிட்டு சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ அறிமுகப்படுத்திய “H” வரிசைக்கான இணைய ஏலத்தின் மூலம் மொத்தம் 91.2 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 16 முதல் 20 வரை நடைபெற்ற இந்த ஏலத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 8,223 பதிவு எண்கள் வெற்றிகரமாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
”H 1″ எண்ணைத் தொடர்ந்து, “H 9” பதிவு எண் 4.97 மில்லியன் ரிங்கிட்டுக்கும், “H 3” எண் 4.21 மில்லியன் ரிங்கிட்டுக்கும் ஏலம் போயின.
இந்தச் சிறப்பு ஏலத்தின் வழி திரட்டப்பட்ட நிதி, சாலைப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் பொது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
அதே சமயம், நாடு தழுவிய அளவில் டேக்ஸி ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் இதன் மூலம் அடுத்த வாரம் நற்செய்தி அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



