
கோத்தா திங்கி, செப்டம்பர்-22,ஜோகூர், கோத்தா திங்கியில் 5 வயது சிறுமி ஒருவர் சொந்த மாமாவால் ஆற்றில் வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சோங் செடிலியில் உள்ள கம்போங் பாடாங் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை சுமார் 9.30 மணியளவில், 37 வயது ஆடவர் ஒருவர் பாராங் கத்தியுடன் 40 வயது ஆடவரைத் துரத்திச் சென்றதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபர் தனது 5 வயது மருமகளை ஆற்றில் வீசியதாக நம்பப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், போராட்டத்திற்குப் பின்னர் அந்த ஆடவரைக் கைதுச் செய்தனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சிறுமியின் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.
உடல் முதலில் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சவப் பரிசோதனைக்காக பாசீர் கூடாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



