Latestமலேசியா

மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் GRIP திட்டம்; அடுத்தாண்டு தொடக்கப்பள்ளி, சமூகங்களுக்கும் விரிவாக்கம் – அமைச்சர் ஏரன்

கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-24-இளையத் தலைமுறையினரிடையே பன்முக கலாச்சாரப் புரிந்துணர்வையும் தேசப்பற்றையும் ஆழமாக விதைக்கும் நோக்கில், ‘கிரிப்’ (GRIP) எனப்படும் தேசிய ஒற்றுமை ஒருங்கிணைப்புத் திட்டத்தை தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு தீவிரப்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு இத்திட்டம் சபா, கெடா, ஜோகூர், திரங்கானு, சிலாங்கூர் மற்றும் சரவாக் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களை உள்ளடக்கி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவு சபா மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக (UiTM) கிளையில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தேசிய அளவிலான GRIP நிறைவு விழாவில் அவர் அதனைக் கூறினார்.

​அவரது உரையை தேசிய ஒற்றுமை அமைச்சின் துணை பொதுச் செயலாளர் Sobri Mat Daud வாசித்தார்.

​ஆகஸ்ட் 20 முதல் 23 வரை நடைபெற்ற இந்த 2026 தேசிய அளவிலான GRIP திட்டத்தில், நாடு முழுவதையும் பிரதிநிதிக்கும் பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த 200 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்ததனர்.

இந்நிலையில், பள்ளிப் பருவத்திலிருந்தே இன நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு முதல் பாலர் பள்ளி சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுச் சமூகம் என மூன்று பிரிவுகளாக இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு ஏதுவாக, பள்ளிகளுக்கான GRIP அதிகாரப்பூர்வ வழிகாட்டி கையேட்டையும் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களிடையே ஆரம்பக் கட்டத்திலேயே நல்லெண்ணத்தையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்து, நாட்டின் சமூக ஒருமைப்பாட்டை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த முடியும் என அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!