Latestமலேசியா

மாயமான MH370 விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம்

கோலாலம்பூர், மார்ச்-4, மாயமான மலேசிய விமானம் MH370-வைத் தேடும் பணிகளை மலேசியா மீண்டும் தொடங்கக்கூடும்.

அது காணாமல் போய் வரும் மார்ச் 8-ம் தேதியோடு பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அவ்வாறு கூறினார்.

விமானத்தைத் தேடி கண்டுபிடிக்கும் பணிகளைத் தொடர, Ocean Infinity நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டியுள்ளது.

அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை வாங்க தம்மால் ஆன அனைத்தையும் செய்யப் போவதாக அந்தோனி சொன்னார்.

No Find No Fee அதாவது கண்டுபிடிக்கவில்லை என்றால் கட்டணம் கிடையாது என்ற பரிந்துரையை விவாதிக்க Ocean Infinity நிறுவனத்தை அழைக்க அமைச்சு தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், தேடும் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என்ற கடப்பாட்டை மலேசியர்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தாம் மறுஉறுதிப்படுத்த விரும்புவதாக அமைச்சர் கூறினார்.

சில புதிய ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்பங்களில் சற்று முன்னேற்றம் தெரிவது நம்பிக்கையளிக்கும் வகையில் இருப்பதாக அந்தோனி லோக் கூறினார்.

2014-ம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி KLIA-வில் இருந்து சீனா பெய்ஜிங் புறப்பட்ட MH370 விமானம், அரைமணி நேரத்திலேயே கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்து மாயமானது.

காணாமல் போன போது, 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேர் விமானத்தில் இருந்தனர்.

அது முதல் விமானத்தைத் தேடும் பணிகள் பன்னாட்டு படைகளின் உதவியுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும், எவ்வித பலனும் இல்லாததால் ஒரு கட்டத்தில் அது நிறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!