Latestமலேசியா

ம.இ.காவை வலுப்படுத்த பாடுபடுவீர் – டத்தோ நெல்சன் வலியுறுத்து

சிரம்பான், ஜன 21 – ம.இ.காவை வலுப்படுத்துவதற்கு உறுப்பினர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என அதன் கல்விக் குழுவின் தலைவரும் செனட்டருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கேட்டுக்கொண்டார். அரசாங்கத்தில் ம.இ.கா பதவியில் இருந்ததாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமூகத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. மேலும் கல்வி மற்றும் சமூக நலன் தொடர்பான நடவடிக்கைகளில் பல்வேறு சேவைகளையும் சளைக்காமல் செய்துவருவதையும் நெல்சன் சுட்டிக்காட்டினார். ம.இ.கா சிரம்பான் தொகுதியின் ஏற்பாட்டில் தலைவருடன் ஒரு பொன்மாலைப் பொழுது என்ற நிகழ்வில் ம,இ.காவின் தேசிய தலைவர் விக்னேஸ்வரன் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது நெல்சன் இதனை தெரிவித்தார்.

கட்சி தொடர்ந்து வலுவாக இருக்கவேண்டும் என்பதில் தேசிய தலைவர் விக்னேஸ்வரன் உறுதியாக இருந்து வருகிறார். கட்சி வலுவுடன் இருந்தால்தான் இந்திய சமூகத்தின் நலன்களுக்காக நாம் தொடர்ந்து பல்வேறு சேவைகளை ஆற்ற முடியும். ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா எந்தவொரு பதவியில் இல்லாவிட்டாலும் இந்திய சமூகத்திற்காக தொடர்ந்து சளைக்காமல் சேவையாற்றி வருகிறது. குறிப்பாக உயர்க்கல்வியை பெற்றுவரும் இந்திய மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதோடு சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப உயர்க்கல்வி வாய்ப்புக்களை பெறுதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுத்து வந்துள்ளது என்றும் நெல்சன் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கத்தின் கையை எதிர்ப்பார்க்காமல் ம.இ.கா சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு செயல் திட்டங்களை கட்சித் தலைவர் விக்னேஸ்வரன் முன்னெடுத்து வருகிறார். கட்சிக்கு புதிய தலைமையகத்துடன் இரட்டை கோபுரத்துடன் தங்கும் விடுதியை நிர்மாணிப்பதற்காக நடவடிக்கையில் ம.இ.கா தலைமைத்துவம் முனைப்பு காட்டி வருகிறது. புதிய கல்லூரியை தொடங்குவதும் இந்த திட்டத்தில் அடங்கும் இந்த திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு ம.இ.கா உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியம் என நெல்சன் வலியுறுத்தினார். இப்போதைய நடப்பு அரசியல் சூழ்நிலையை உணர்ந்து கட்சியை வலுப்படுத்துவற்கு அனைவரின் பங்கேற்பும் அவசியம் தேவையென நெல்சன் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!