
சிரம்பான், ஏப்ரல்-25-நெகிரி செம்பிலான், ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக அவதூறு பரப்ப, சமூக ஆர்வலர் Chegubard என்று அழைக்கப்படும் Badrul Hisham Shaharin மற்றும் இதர இருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கோவில் நிதியை முறைகேடு செய்ததாகக் கூறி, Chegubard தலைமையில் இன்று நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற இருவர் முறையே P. சுரேஷ்குமார் மற்றும் M. நடராஜன் ஆவர்.
அவர்களில் சுரேஷ்குமார், ஆலய நிர்வாகம் நிதி கையாடல் செய்ததாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளார்.
கோவில் பணத்தில் RM300,000 ரிங்கிட் முறைகேடு செய்யப்பட்டதாக அப்புகார் கூறுகிறது.
இதனால் பக்தர்கள் பலர் புகாரளிக்க, சங்கப் பதிவிலாகா கோவில் நிர்வாகத்தின் பதிவை இரத்துச் செய்தும் விட்டது.
ஆனால், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என கோவில் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த இந்தத் தடை உத்தரவு, வரும் மே 15-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
அதுவரை கோவில் நிர்வாகத்திற்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்க பிரதிவாதிகளுக்கு அனுமதியில்லை.



