ஈப்போ, நவம்பர்-10, கெரிக்-ஜெலி கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் தித்திவங்சா R&R அருகே லாரி மோதியதில், உடல் சிதைந்து வரிப் புலி கொடூரமான முறையில் இறந்துபோனது.
நேற்று அதிகாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் லாரியின் டயரில் அரைபட்டு புலியின் தலை துண்டாகி, மற்ற உடல் பாகங்கள் சிதைந்து சாலையில் சிதறின.
அந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகின.
உடல் உருக்குலைந்து போனதால், அது ஆண் புலியா பெண் புலியா என்பததையும், அதன் எடையையும் கண்டறிய முடியவில்லை.
என்றாலும் அது ஒரு பெரியப் புலியாக இருக்கலாம் என நம்பப்படுவதாக, பேராக் வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN கூறியது.
இவ்வேளையில், இறந்துபோன புலியின் சடலத்தின் பல பகுதிகள் காணாமல் போயிருப்பது PERHILITAN-னுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தோல், கூரியப் பற்கள், எலும்பு, மீசை, நகம் ஆகியவை திருடுபோயிருக்கலாம் என்பதால், போலீசுடன் PERHILITAN ஒத்துழைத்து வருகிறது.
அவற்றை யாராவது திருடியிருந்தால் தாங்களாகவே முன்வந்து ஒப்படைத்து விட வேண்டும்.
இல்லையென்றால் அதிகபட்சம் 1 மில்லியன் ரிங்கிட் அபராதம் மற்றும் 15 ஆண்டுகள்
சிறைத்தண்டனையை
எதிர்நோக்க வேண்டி வருமென அத்துறை எச்சரித்தது.
அவ்விபத்து குறித்து லாரி உரிமையாளர் சார்பில் இதுவரை புகார் செய்யப்படவில்லை என கெரிக் போலீசும் உறுதிப்படுத்தியது.