Latestமலேசியா

லோரி மற்றும் ‘ஸ்டால்களை’ உட்படுத்திய விபத்து ; சாலையோர அங்காடி வியாபாரிகளின் பாதுகாப்பு மீதான விவாதத்தை தூண்டியுள்ளது

கோலாலம்பூர், டிசம்பர் 22 – சிலாங்கூர், உலு கிள்ளானுக்கு அருகே, தாமான் கெராமாட் AU2-டில், ஓட்டுனர் கை பிரேக்கை இழுக்க மறந்ததால், டிரக் லோரி ஒன்று, அங்காடி வரிசை கடைகளை மோதி விபத்துக்குள்ளானது.

எண்ணெய் நிலையம் ஒன்றுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த டிரக், திடீரென பின்நோக்கி நகர்ந்து, சாலையோரம் இருந்த இரு அங்காடி கடைகளை மோதித் தள்ளியது.

அவ்விபத்தில், பான விற்பனை கடை ஒன்று முற்றாக சேதமடைந்தது.

அச்சம்பவம் தொடர்பான, 47 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

விபத்தில் சேதமடைந்த கடை ஒன்றின் உரிமையாளர், டிரக் ஓட்டுனரை ஆவேசமாக ஏசும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. சேதமடைந்த கடை உரிமையாளர் போலீஸ் புகார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அச்சம்பவம், சாலையோர அங்காடி வியாபாரிகளின் பாதுகாப்பு மீதான விவாதத்தை தூண்டியுள்ளது.

“சாலையோரத்தில் கடைகளை அமைக்க கூடாது என அரசாங்கம் தடை விதிப்பதற்கு இது தான் காரணம்” என இணையப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;

“வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்வது தவறல்ல. ஆனால், சாலையோரத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழும் போது, வாழ்க்கையையே தொலைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!