
எடின்பரா, மே-13-ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருநங்கை ஒருவர் வெற்றிப் பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
தமிழகத்தில் பிறந்து வளர்ந்த Dr. Q மணிவண்ணன் ஸ்காட்லாந்து பசுமைக் கட்சி சார்பாக Edinburgh மற்றும் Lothians East தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை உறுப்பினர்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.
இந்த வெற்றி பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
மணிவண்ணன் பிரிட்டிஷ் குடியுரிமையோ அல்லது நிரந்தர வசிப்பிட உரிமையோ பெறாதவர்.
அவர் தற்போது மாணவர் விசா மற்றும் பட்டதாரி விசா நடைமுறைகளில் ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறார்.
கடந்தாண்டு ஸ்காட்லாந்து அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் எவரும் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்த விதியின் கீழ்தான் மணிவண்ணன் போட்டியிட்டு வென்றுள்ளார்.
தனது வெற்றி குறித்துப் பேசிய அவர், “நான் ஒரு பால்புதுமையினர். புலம்பெயர்ந்த தமிழன். ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்திற்காகவும் எனது குரல் ஒலிக்கும்,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
இருப்பினும், பிரிட்டிஷ் குடியுரிமை இல்லாத ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானதை அந்நாட்டு வலதுசாரி அரசியல்வாதிகள் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வெற்றி பன்முகத்தன்மைக்குக் கிடைத்த வெற்றி என பசுமைக் கட்சி கொண்டாடி வருகிறது.



