வார்டில் அனுமதிக்க வங்கிக் கணக்கில் பணம் கேட்டவர் ஊழியர் அல்ல -சுல்தான் அமினா மருத்துவமனை விளக்கம்

ஜோகூர் பாரு, ஏப் 22 – அதிகாரப்பூர்வ ரசீது இல்லாமல் வார்டு வைப்புத்தொகையை ரொக்கமாகக் கோரியதாகக் கூறப்படும் மருத்துவமனை ஊழியர் தொடர்பான வைரல் பிரச்னையை ஜோகூர் சுல்தான் அமினா மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளதோடு இந்த விவகாரத்தை கடுமையாக கருதுகிறது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மருத்துவமனை ஊழியர் அல்ல என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பான விசாரணை போலீசிடம் விடப்பட்டுள்ளதாக Threads வழியாக வெளியிட்ட பதிவில் சுல்தான் அமினா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு அதிகாரப்பூர்வ வருவாய் முகப்பிடத்தில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
அதோடு ஒவ்வொரு பணப் பட்டுவாடாவுக்கும் செல்லுபடியாகும் ரசீது பெறப்படுவதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, மருத்துவமனை வார்டு பதிவிற்கு முன்பணம் வசூலிக்கிறதா என்று கேள்வி எழுப்பிய ஒரு பெண்ணின் பதிவு Threads தளத்தில் வைரலானது.



