கோலாலம்பூர், செப்டம்பர் -22, விசாவைப் புதுப்பிப்பதற்கான கட்டணமாக வங்காளதேசி ஒருவர் செலுத்திய 14,000 ரிங்கிட்டை, வெளிநாட்டு தொழிலாளர்களைத் தருவிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பணியாளர்கள் மோசம் செய்திருக்கின்றனர்.
Salahudin என மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 34 வயது ஆடவர், 2013-ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
முறையான பயணப் பத்திரத்தை வைத்துள்ள அவ்வாடவர், வேலை விசா காலாவதியாகும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்தின் வாயிலாக அதனைப் புதுப்பித்து வந்துள்ளார்.
ஆகக் கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் விசாவைப் புதுப்பிக்க வேண்டி மீண்டும் அந்நிறுவனத்தை நாடினார்.
2023 ஜூனிலிருந்து இவ்வாண்டு வரை மொத்தமாக 14,200 ரிங்கிட்டை, ரொக்கமாகவும், வங்கிக் கணக்குக்கு மாற்றியும், அந்நிறுவனத்தின் பணியாளர்களான இருவரிடம் அவர் செலுத்தியுள்ளார்.
ஆனால், புதிய விசா எப்போது கிடைக்கும் என அவ்வாடவர் கேட்கும் போதெல்லாம் இருவரும் பல்வேறு காரணங்களைக் கூறி அவரை அலைக்கழித்தனர்.
ஒரு கட்டத்தில் அவரின் கடப்பிதழ் காணாமல் போய்விட்டதாகவும் சாக்குபோக்கு கூறியுள்ளனர்.
சந்தேகத்தில் அந்நிறுவனத்தைக் தொடர்புகொண்டு கேட்டால், இருவரும் வேலைக்கு வராமல் காணாமல் போய் விட்டதாக பதில் வந்துள்ளது.
தனது சேமிப்புப் பணமும் நண்பர்களிடம் கடனாக வாங்கியப் பணமும் இப்படி ஏமாற்றப்படும் என தான் நினைக்கவில்லை என, தனது போலீஸ் புகாரில் Salahudin கூறினார்.