
விருதுநகர், ஏப்ரல்-20,
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் வழக்கம் போல் பட்டாசு மருந்துகள் கலக்கப்படும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வெடிப்பின் சத்தம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்டதுடன், ஆலையின் 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயை அணைத்தனர்.
இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறைந்தது 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.



