Latestமலேசியா

விவசாயம் செழிப்பதற்காகக் குனிந்த இந்தியர்களை தலைநிமிரச் செய்தாரா மகாதீர்? இந்தியர்களின் விசுவாசம் மீது களங்கம் ஏற்படுத்தாதீர்! – டத்தோ ரமணன்

சுங்கை பூலோ, ஜன, 14 – நாட்டில் விவசாயம் செழிப்பதற்காக   நாட்டின் வளப்பத்திற்கு குனிந்த இந்தியர்களை  தலைநிமிர செய்வதற்கு டாக்டர் மகாதீர் தமது பதவிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார் என தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். ஆசிய கண்டத்தின் புலியாக கர்ஜிக்கும் மலேசிய நாட்டின் தொடக்கக்கால வளப்பத்திற்கு அடித்தளமிட்டவர்கள் இந்தியர்கள் என்பதை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மறந்து விட்டாரா? அல்லது மறைக்கப் பார்க்கிறாரா? என்றும் ரமணன் வினவினார். ஆசிய தொழில்துறை புரட்சி தலையெடுப்பதற்கு முன்னதாக, விவசாயத் துறையில் பீடு நடைப் போட்ட முதலாவது நாடாக மலேசியா திகழ்ந்ததற்குக் காரணம் இந்தியர்கள். காட்டை அழித்து ரப்பர் மரக்கன்றுகளை நட்டார்கள். அவர்கள் நட்ட மரங்கள் எல்லாம் வான் நோக்கி உயர்ந்தன; ரப்பர் பால் சந்தையும் வின்முட்டும் உச்சிக்குச் சென்றன! ஆனால், பூமி பார்த்து குனிந்தவர்களின் வாழ்க்கை மட்டும் உயரவே இல்லை . 

அக்காலக்கட்டத்தில் பிரதமர் பதவியை தனது இரும்புக் கரங்களால் தற்காத்து வைத்திருந்த மகாதீர், நாட்டை மெல்லத் தொழில் புரட்சிக்கு உருமாற்றினாலும், இந்தியர்கள் வாழ்வில் மட்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தத் தவறியது ஏன் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் வெளியிட்ட அறிக்கையில்  வினவினார். இந்தியர்களின் வாழ்வில் ஒளியேற்றிருக்க வேண்டிய தருணம் நீர்த்துப் போனாலும், இந்தியர்கள் சுய உழைப்பில் முன்னேறி வருகிறார்கள். வாழ்வளிக்கும் மலேசிய மண்ணுக்கு நன்றியுடனும் முழு விசுவாசத்துடனும் இருந்து வருகிறார்கள். உலக அரங்கிலும் மலேசிய நாட்டின் பெயரை நிலை நாட்டுவதிலும் ஆர்வம் செலுத்தி, பலச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். இந்நாட்டு இந்தியர்களின் பூர்வீகம் தமிழ் நாடாக இருந்தாலும், அங்கு சுற்றுலாவுக்கும் சமய வழிபாட்டுக்கும் செல்கின்றவர்கள், “நாங்கள் மலேசிய இந்தியர்கள்” என்று மட்டுமே தங்களை அங்கு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். 

மலேசிய நாட்டின் மீதான தேசப்பற்று தங்களின் உயிரோடு கலந்திருப்பதனால்தானே நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தாய்மொழியில் பேசிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டிருந்தாலும், நமது தேசிய மொழியான மலாய் மொழியை நமது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமே! மூவின கலை, கலாச்சாரம், பண்பாடுதானே நமது மலேசிய திருநாட்டின் அடையாளம்! இந்தியர்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் விசுவாசத்திற்குக் களங்கம் விளைவிக்க வேண்டாம்  என மகாதீருக்கு ரமணன்  எச்சரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!