
தெலுக் இந்தான், மே-2,
பேராக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில், இவ்வாண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா பக்திப் பரவசத்துடனும் விமரிசையாகவும் நடைபெற்றது.
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையும் பெருமையும் வாய்ந்த இவ்வாலயம், மலேசியாவில் சித்ரா பௌர்ணமி திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
நாடளாவிய நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானின் அருளைப் பெற அலையெனத் திரண்டிருந்தனர்.
விழா நாளன்று விடியற்காலை 4.30 மணிக்கே பால்குடம் எடுக்கும் வைபவத்துடன் வழிபாடுகள் தொடங்கிய நிலையில், சுவாமிக்கு விசேஷ பால் அபிஷேகம், தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் அலங்காரங்களுடன் அரங்கேறின.
பின்னர் மகா அபிஷேகமும்
மகேஸ்வர பூஜையும் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.00 மணிக்கு ஆலயத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4.00 மணியளவில் மீண்டும் மகா அபிஷேகமும், 6.30 மணிக்குச் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்று விழா நிறைவுற்றது.
காலை முதல் மாலை வரை வண்ணமயமான காவடிகள் மற்றும் பால்குடங்களை ஏந்தி, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தி முருகப் பெருமானை வழிபட்டனர்.
இந்நிகழ்வில், பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A.சிவநேசன்,
துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி,
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா
உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஆண்டுதோரும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் இவ்விழா மலேசியாவில் முருகப் பெருமானுக்கான மற்றுமொரு தனித்துவமான ஒரு விழாவாகும்.



