புத்ராஜெயா, ஏப்ரல்-28, அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்யும் பொருட்டு, 16-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒற்றுமை அரசாங்கத்தை நிலை நிறுத்தும் முயற்சிகளை அம்னோ ஆதரிக்கும்.
ஒற்றுமை அரசாங்கத்திற்கான தங்களின் கடப்பாடு தொடரும் என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
ஒற்றுமை அரசில் இடம் பெற்றுள்ள 18 கட்சிகளும் ஒரே நோக்கத்தைக் கொண்டிருப்பதால், நாட்டின் நலனை முன்னிறுத்தி அவை தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து இரண்டாவது தவணையாக அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்ற PKR கட்சியின் விருப்பம் குறித்து கேட்ட போது சாஹிட் அவ்வாறு கூறினார்.
15-வது பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மைக் கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டதால், அப்போதைய மாமன்னரின் பரிந்துரையின் பேரில் வரலாற்றில் முதன் முறையாக நாட்டில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது.
அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த PKR, UMNO, DAP, GPS உள்ளிட்ட கட்சிகள் அன்வாரின் தலைமையை ஏற்க, ஒன்றரை ஆண்டுகளாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.