சிங்கப்பூர், ஜூலை 15 – 2023-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட “2023 பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அறிக்கையின்” அடிப்படையில், கடந்தாண்டு நெடுகிலும் சிங்கப்பூரில் 33 ஆயிரத்து 541 குழந்தைகள் பிறந்துள்ளன.
எனினும், 2022-ஆம் ஆண்டு பதிவான 35 ஆயிரத்து 605 குழந்தைகளை காட்டிலும், அந்த எண்ணிக்கை 5.8 விழுக்காடு குறைவாகும்.
அதே சமயம், 2021-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த 38 ஆயிரத்து 672 குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு பதிவுச் செய்யப்பட்ட எண்ணிக்கை 13.3 விழுக்காடு சரிவு கண்டுள்ளது.
1971-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 47 ஆயிரத்து 88 குழந்தைகள் பிறந்த வேளை ; அதன் பின்னர், கடந்த ஐம்பது ஆண்டுகளில் மிகவும் குறைவான குழந்தைகள் பிறந்த ஆண்டாக 2023-ஆம் ஆண்டு கருதப்படுவதாக, சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனை சாவடி ஆணையத்தின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பிறப்பு மற்றும் இறப்பு புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
முன்னதாக, வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் மக்கள் தொகையின் மொத்த கருவுறுதல் விகிதம், ஒன்றுக்கும் கீழே குறைந்துள்ளதாக, கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.