
கோலாலம்பூர், ஜூன்-16 – 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகள் உலக வரலாற்றிலேயே மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக இருக்கக்கூடும் என்று பருவநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மலேசிய தேசியப் பல்கலைக்கழகமான UKM-இன் பருவநிலை மாற்ற நிபுணர் டாக்டர் பிரெடோலின் தங்காங் (Dr Fredolin Tangang), இதற்கு முக்கியக் காரணமாக எல் நினோ (El Niño) பருவநிலை நிகழ்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் நீண்டகால வறட்சி, அதிக வெப்பம், காட்டுத் தீ மற்றும் புகைமூட்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், மழை குறைவதால் நீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
இதனிடையே, எல் நினோவின் தாக்கத்தை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக இருப்பதன் மூலம் அதன் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.



