
புத்ராஜெயா, ஆகஸ்ட்.18-ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான 2026 SPM தேர்வுத் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வுகள் நவம்பர் 23 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும் என கல்வியமைச்சு இன்று அறிவித்தது.
மலாய் மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களுக்கான வாய்மொழித் தேர்வுகள் முறையே அக்டோபர் 26 முதல் 29 வரையிலும், நவம்பர் 2 முதல் 5 வரையிலும் நடைபெறும். அறிவியல் செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 16 முதல் 18 வரை நடைபெறும். மலாய் மொழி செவிமடுத்தல் தேர்வு நவம்பர் 30-ஆம் தேதியும், ஆங்கில மொழி செவிமடுத்தல் தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதியும் நடைபெறும் என அமைச்சு அறிக்கையொன்றில் கூறியது.
2026 SPM தேர்வு எழுத நாடு முழுவதும் உள்ள 3,334 தேர்வு மையங்களில் மொத்தம் 420,879 பேர் பதிவு செய்துள்ளனர். தேர்வு வாரியம் 2026 SPM தேர்வுக்கான முழுமையான அட்டவணையை விரைவில் வெளியிடும்.
தேர்வு சுமூகமாகவும் நேர்த்தியான முறையிலும் நடத்தப்படுவது உறுதி செய்யப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டது.



