
செராஸ், ஜூன்-27-கோலாலம்பூர், செராஸில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றை இரகசிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் கொட்டத்தை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஒடுக்கியுள்ளது.
ஜூன் 20-ஆம் தேதி நடத்தப்பட்ட Ops Horitus அதிரடிச் சோதனையில், மொத்தம் 135.63 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ecstasy மாத்திரைகள் மற்றும் MDMA திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான், இச்சோதனைகளில் ஒரு சீன நாட்டுப் பெண் உட்பட 7 சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இக்கும்பல் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் உள்நாட்டு சந்தையைக் குறிவைத்து இந்த போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



