Latestமலேசியா

50 ஆண்டுகால நில உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு; தீபாவளிப் பரிசாக 31 இந்தியக் குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கிய சிவநேசன்

சித்தியவான், நவம்பர்-1-பேராக், சித்தியவான் கம்போங் டிராலிக் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நில உரிமைக்காகக் காத்திருந்த 31 இந்தியக் குடும்பங்களுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளிப் பரிசாக, இந்த நிலப்பட்டாக்களைப் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் நேற்று நேரில் வழங்கினார்.

சுங்கை வாங்கி தோட்டத்திலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் இதே பகுதியைச் சேர்ந்த 51 குடும்பங்களுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

நிலப்பட்டா என்பது வெறும் ஆவணம் மட்டுமல்ல; குடும்பங்களின் பாதுகாப்புக்கும் எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்கும் அடித்தளமாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.

கெரிக், குவாலா கங்சார், பீடோர், சுங்காய் மற்றும் தாப்பா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக சிவநேசன் தெரிவித்தார்.

அரசாங்க நிலங்களில் வசிக்கும் இந்தியக் குடும்பங்களின் நீண்டகால நில உரிமைப் பிரச்சனைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, 50 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்காக நிலப்பட்டா பெற்ற குடும்பங்கள் டத்தோ சிவநேசனுக்கு நன்றி தெரிவித்தன.

இவ்வாண்டு தீபாவளி இக்குடும்பங்களுக்கு மேலும் அர்த்தமுள்ளதாகவும் குதூகலமாகவும் அமையும் என்றால் அது மிகையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!