பாடாங் பெசார், ஏப் 2 – ராணுவம், போலீஸ், பள்ளிகள், தங்கும் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அரசாங்கத்தின் அனைத்து இடங்களிலும் இம்மாதம் முதல் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும். மக்கள் உள்நாட்டு அரிசியை பெறுவதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். உள்நாட்டு அரிசிக்கு பதில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அரசாங்க மருத்துவமனைகள் , பயிற்சி மையங்கள் , தங்கும் விடுதிகள் போன்றவை பயன்படுத்துதன் மூலம் பல்வேறு வகையான உள்நாட்டு அரிசியின் விநியோகம் மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி கிடைக்க முடியும் என அவர் கூறினார்.
Fama எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை வாரியம் மற்றும் விவசாய சங்க வாரியம் போன்றவற்றிற்கு உள்நாட்டு அரிசி ஆலைகள் போதுமான அரிசியை விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறியும்படி விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு தாம் தெரிவித்திருப்பதாக அன்வார் கூறினார். இதன் மூலம் உற்பத்தி போதுமாக இருப்பதையும் மக்களுக்கு அரிசி சென்றடைவதையும் உறுதிப்படுத்த முடியும் என அவர் கூறினார். மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த அரசாங்கம் விவேகமான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பெர்லீஸ் மாநில நிலையிலான மடானி நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது அன்வார் தெரிவித்தார்.