ஜோகூர் பாரு, ஜூன் 30 – இடைக்கால ஜோகூர் சுல்தான் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலை ( Tunku Mahkota Ismail ) லஞ்சக் குற்றத்துடன் தொடர்புபடுத்திய பாஸ் ஆதரவாளர் கிளப்பின் கணக்கை கையாண்டுவருபவரிடம் நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புக்கிட் அமான் உயர்மட்ட விசாரணை பிரிவு இந்த விசாரணயை நடத்திவருவதாக ஜோகூர் போலீஸ் தலைவர் எம்.குமார் தெரிவித்தார்.
தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பொது அமைதி மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் நிந்தனை அம்சத்தைக் கொண்ட தகவலை பகிர்வோர் , பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.