
நியூ ஜேர்சி, ஜூன் 8 – உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் உடனான தமது நட்பு முறிந்து விட்டதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
Tesla, Space X, X ஆகியவற்றின் உரிமையாளருமான மாஸ்க்குடன் கசந்துபோன உறவை சரி செய்யும் எண்ணமேதும் இல்லை; அவரிடம் பேசுவதற்கும் இனி ஒன்றுமில்லை என NBC தொலைக்காட்சியுடனான தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் சொன்னார்.
என்றாலும் மாஸ்கின் StarLink துணைக்கோள இணைய நிறுவனம் மற்றும் Space X ராக்கெட் ஏவும் நிறுவனங்களுக்கான அமெரிக்க அரசின் குத்தகை ஒப்பந்தங்களை இரத்துச் செய்யும் திட்டம் தமக்கில்லை என்றார் அவர்.
ஆனால் தமது வரிக் கொள்கைகளை ஆதரித்து வாக்களித்த குடியரசுக் கட்சிக்காரர்களுக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒருவேளை இலோன் மாஸ்க் நிதியுதவி அளித்தால், மோசமான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி வருமென டிரம்ப் கடுமையாக எச்சரித்தார்.
புதிய வரிக்குறைப்பு மசோதா தொடர்பில் டிரம்ப் – மாஸ்க் இருவருக்கும் வெடித்த பிரச்னை கடந்த ஒரு வாரமாக பொதுவெளிக்கே வந்து விட்டது.
ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவது அமெரிக்கர்கள் மட்டுமின்றி வெள்ளை மாளிகை பணியாளர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.