
கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதைச் சம்பவங்கள் பதிவு— கல்வி அமைச்சு
கோலாலம்பூர், பிப்ரவரி-12,
கடந்தாண்டு மட்டும் நாட்டிலுள்ள அரசாங்கப் பள்ளிகளில் மொத்தம் 5,038 பகடிவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில், 2,889 சம்பவங்கள் ஆரம்பப் பள்ளிகளிலும் 2,149 சம்பவங்கள் இடைநிலைப் பள்ளிகளிலும் நடந்துள்ளன.
இச்சம்பவங்களைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், அதில் சமரசப் போக்கே கிடையாது என்றார்.
பகடிவதையைத் தடுப்பு தொடர்பில் 2000-ஆம் ஆண்டு முதல் பள்ளிகளுக்கு 5 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தவிர, 1,700க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
பகடிவதைகளை கண்காணிக்க, கடந்தாண்டு 200 பள்ளித் தங்கும் விடுதிகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டன; அடுத்ததாக 333 விடுதிகளில் RM5 மில்லியன் செலவில் இவ்வாண்டு CCTV நிறுவப்படும் என்றார் அவர்.
மாணவர்களுக்கு பாதுகாப்பான, ஆதரவான சூழலை உருவாக்குவதே அமைச்சின் குறிக்கோள் என மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அவர் சொன்னார்.



