
கோத்தா கினாபாலு, பிப்ரவரி-23-சபாவை இன்று அதிகாலை 12.57 மணிக்கு ஒரு வலுவான நிலநடுக்கம் உலுக்கியது.
ரிக்டர் அளவைக் கருவியில் 6.8-டாக பதிவாகிய இந்த அதிர்வு, கூடாட் நகரின் மேற்கு கரையிலிருந்து சுமார் 49 கிலோ மீட்டர் தொலைவில், 678 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
கூடாட் தவிர்த்து, கோத்தா கினாபாலு, புத்தாத்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் அதிர்வை உணர்ந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உடனடியாக கடற்கரை பகுதிகளில் மற்றும் சபா அனைத்துலக மாநாட்டு மையம் அருகே கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சமூக ஊடகங்களில் தங்கள் அனுபவங்களை பகிர, வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
சரவாக், புருணை மற்றும் தீபகற்ப மலேசியாவின் சில பகுதிகள் வரையில் நில அதிர்வு உணரப்பட்டது.
எனினும் மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MetMalaysia, சுனாமி அபாயம் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை பெரிய சேதம் அல்லது உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை முறையாகப் பின்பற்றுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



