
ஜோகூர் பாரு, மார்ச் 5 – ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆன்லைன் வெளிநாட்டு பணிப்பெண் விண்ணப்ப முறையை கையாண்டு சமூக வருகை அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தும் ஒரு கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.
மார்ச் 2ஆம் தேதியும் , 3ஆம் தேதியும் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில்,
16 வெளிநாட்டினரும், இந்த விவகாரத்தில் பின்னணியாக செயல்பட்ட ஒரு உள்ளூர் நபரும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஷக்கரியா ஷாபான் தெரிவித்தார்.
விசாரணைகளில், பணிப்பெண் வகை PLKS ஐப் பெறுவதற்காக கும்பல் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், அளவுகோல்களை பூர்த்தி செய்யாதவர்களிடம் ஒரு நபருக்கு 6,000 ரிங்கிட் வசூலித்ததாகவும் தெரியவந்தது.
அவர்கள் நாட்டில் அதிக நாட்கள் தங்கியிருந்தது , சமூக வருகை அனுமதிச் சீட்டுகள் மற்றும் தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது.
நாட்டில் வீட்டு உதவியாளர்களாக இருந்துவருவதாக கூறப்படும் சந்தேக நபர்கள், சுமார் ஒரு வருடமாக இயங்கி வந்த ஒரு பொழுதுபோக்கு மையத்தில் பணிப்பெண்களாகப் பணிபுரிவதும் கண்டறியப்பட்டதாக ஷக்கரியா வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.



