
கோத்தா கெமுனிங், மார்ச்-10-நாட்டில் இன-மதத் தூண்டுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை முறியடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மாறாக, வெறும் பார்வையாளராக அதிகாரத் தரப்பு கடந்துபோய் விடக் கூடாது என, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.
சில நபர்கள் புனித நூல்களை அவமதிப்பதையும் தெய்வங்களை இழிவுப்படுத்துவதையும் காணமுடிகிறது.
ஆனால், பெரும்பாலும் இவற்றைத் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் இல்லை என்பது கவலையளிக்கிறது.
இன-மத மோதல்களைத் தூண்டி விடுபவர்கள் தண்டனையின்றி சுதந்திரமாக சுற்றுகின்றனர்.
இது ஒரு பலவீனமான மற்றும் தீர்மானமற்ற நிர்வாகத்தின் அறிகுறியாகும்.
மக்கள் அரசாங்கத்தை பலவீனமாகப் பார்க்கும்போது சட்டத்தை தங்கள் கைகளிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.
இதனை அனுமதிக்கக் கூடாது; எனவே உள்துறை அமைச்சும், தேசியப் போலீஸ் படையும் வெறுமனே எச்சரிக்கை விடுப்பதை விடுத்து, தக்க நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களைக் கைதுச் செய்து நீதிமன்றங்களில் குற்றம் சாட்ட வேண்டும்.
இது சட்ட முறைப்படி இயங்கும் நாடு என்பதை நிரூபிக்க வேண்டும்.
கருத்து சுதந்திரம் என்றப் பெயரில் கலகத்தை உண்டுபண்ணுவதை நாம் அனுமதிக்கக் கூடாது என, அறிக்கை வாயிலாக பிரகாஸ் கேட்டுக் கொண்டார்.



