
நிபோங் தெபால், மார்ச்-17-பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசியதாக, சமூக ஆர்வலர் அருண் துரைசாமி இன்று பினாங்கு நிபோங் தெபால் Jawi மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் மார்ச் 12-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவை ஏற்றியதாக குற்றச்சட்டில் கூறப்பட்டது.
“இதுதான் போலீஸும் அரசாங்கமும் இந்துக்களை நடத்தும் விதம் என்றால், சாலையில் இறங்கி போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்ற ரீதியில் அவரின் பதிவு இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்து.
எனினும் குற்றச்சாட்டை மறுத்து 56 வயது அருண் விசாரணைக் கோரினார்.
இதையடுத்து 5,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அருண் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வரும் ஜூன் 22-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.
முன்னதாக காலை 8.15 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட அருணை வரவேற்க, அவரின் ஆதரவாளர்கள் சிறிய அளவில் குழுமியிருந்தனர்.



