
செலாமா, மார்ச்-26-நான்காண்டுகளுக்கு முன் ஒரு பள்ளியில் மின் விசிறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு RM6,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம், பேராக், செலாமாவில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில் நிகழ்ந்தது.
அப்போது, 8 வயதான அம்மாணவி, வகுப்பறையில் இருந்தபோது, மின் விசிறி திடீரென விழுந்து, அவரது இடது கைவிரலிலும், நெஞ்சுப் பகுதியிலும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இழப்பீடு கோரி 2024-ஆம் ஆண்டு ஜனவரியில், பள்ளியின் தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, பேராக் கல்வி இயக்குநர், தேசியக் கல்வி இயக்குநர் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக மாணவியின் தந்தை வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த செலாமா மேஜிஸ்திரேட் நீதிமன்றம், வகுப்பறையில் மின் விசிறி முறையாகப் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிச் செய்ய பிரதிவாதிகள் தவறி விட்டதாக தீர்ப்பளித்தது.
இதையடுத்து, மாணவிக்கு ஏற்பட்ட காயத்திற்கும் வலிக்கும் இழப்பீடாக அந்த 6,000 ரிங்கிட்டை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



