Latestமலேசியா

காஜாங் சிறையில் தாக்கப்பட்ட முனியாண்டி கவலைக்கிடம்; நியாயம் கேட்கும் மனைவி மீனாம்பிகை

காஜாங், மார்ச்-28-காஜாங் சிறையிலிருந்த முனியாண்டி முருகையா எனும் இந்திய ஆடவர், திடீரென படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சக கைதிகளால் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் கணவர் இருப்பதாக, முனியாண்டியின் மனைவி மீனாம்பிகை ரத்னம் வேதனையுடன் குறிப்பிட்டார்.

பூச்சோங் பெர்டானாவில் வசித்து வந்த 51 வயது கணவர், சில குற்றங்கள் செய்ததாக மீனாம்பிகையே போலீஸ் புகார் செய்து பிடித்துக் கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்தால் பாதுகாப்பாகவாவது இருப்பார் என்ற நம்பிக்கையில் தான், கணவரை பிடித்துகொடுத்த மீனாம்பிகைக்கு, தற்போது நடந்துள்ள சம்பவம் சொல்ல முடியாத வேதனையைத் தந்துள்ளது.

ஜனவரியில் கைதான முனியாண்டிக்கு 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வரும் ஜூலை 7-ஆம் தேதி விடுதலையாகவிருந்த கணவர், தற்போது பேச்சு மூச்சின்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

கேட்டால் கைதிகள் தாக்கினார்கள் என்று மட்டுமே அதிகாரிகளிடமிருந்து பதில் வருகிறது.

எனவே, உள்ளே என்ன தான் நடந்தது என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மீனாம்பிகை போலீஸ் புகாரும் செய்துள்ளார்.

ஏற்கனவே, இடப்பக்க முட்டிக் காலுக்குக் கீழ் இழந்து, சக்கர நாற்காலியை நம்பியிருக்கும் 46 வயது மீனாம்பிகை, வருமான பற்றாக்குறையால் முறுக்கு, டிஷு போன்றவற்றை விற்று நாட்களைச் கடத்தி வருகிறார்.

இந்நிலையில், நியாயம் கோரும் தமது முயற்சிக்கு பொது மக்கள் மற்றும் அமைப்புகளின் உதவியையும் இவர் எதிர்பார்க்கிறார்.

கணவர் என்றும் பாராமல், சட்டத்தை நம்பி போலீஸிடம் அவரை பிடித்துகொடுத்த மனைவிக்கு, இது தான் கைமாறா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மீனாம்பிகைக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!