
புத்ராஜெயா, ஏப்ரல்-19-மலேசிய இந்தியச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவும் நோக்கில், இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, மொத்தம் 452,000 ரிங்கிட் நிதியுதவியை அறிவித்துள்ளது.
மித்ராவின் ‘Bantuan Sinar Cahaya’ திட்டத்தின் கீழ், மொத்தம் 253 தகுதியுடைய பயனர்கள் இந்த நிதியுதவியைப் பெறவுள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 11-ஆவது தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிதியுதவியின் முக்கிய விவரங்கள்…
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு தலா 3,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
126 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,500 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
48 தாய்மார்களுக்குப் பிரசவ கால உதவித்தொகையாக தலா 1,000 ரிங்கிட்டும், குடும்பத் தலைவரை இழந்த 22 குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கு செலவுகளுக்காக தலா 2,000 ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது.
தேசிய நல வாரியத்துடன் (YKN) இணைந்து செயல்படுத்தப்படும் இந்நிதி, வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் நேரடியாகப் பயனர்களின் வங்கிக் கணக்குகளில் போடப்படும்.
தகுதிப் பெற்றவர்களின் பட்டியல் உட்பட மேல் தகவல்களை மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது அவர்களின் தொலைப்பேசி, மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.



