Latestமலேசியா

பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள ​புக்கிட் பிந்தாங் நீர் திருவிழா: நிறைவு விழாவைத் தவிர்க்கும் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், மே-2,

‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’ சுற்றுலாத் திட்டத்தின் கீழ், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்று வரும் Rain Rave நீர் இசை திருவிழா தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

​இந்த விழாவில் ஆடை கலாச்சாரம் மற்றும் செயல்பாடுகள் இஸ்லாமிய பண்புகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, பல்வேறு சமய அமைப்புகள் தங்களின் கண்டனத்தைப் பதிவுச் செய்து வருகின்றன.

ஆனால், இது வெறும் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கையே என்றும், தேவையில்லாமல் அரசிலாக்க வேண்டாமென்றும் சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிக் கேட்டுக் கொண்டார்.

என்றாலும், சுற்றுலா வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் கலாச்சார மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்பதே எதிர்ப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

பாஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலே கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

_’நட்ட நடு சாலையில் இரவு கேளிக்கை மையம் இருந்தால் எப்படி இருக்குமோ இதுவும் அப்படித் தான் இருக்கிறது”_ என கடும் தொனியில் அக்மால் சாடியிருந்தார்.

தற்போது அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடியும், வருங்காலங்களில் இத்தகைய பொது நிகழ்வுகளை அனுமதிக்கும் முன் உரிய மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கேளிக்கைகளை நாம் எதிர்க்கவில்லை.

ஆனால் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அது இந்த நாட்டின் கலாச்சார அம்சங்கள், மத உணர்வுகள், மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே அம்னோவின் நிலைப்பாடு என்றார் அவர்.

​சமூக வலைத்தளங்களில் இந்த எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இன்று நடைபெறவிருக்கும் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதனைத் தவிர்த்துள்ளார்.

அதே நேரத்தில் இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதால் பிரதமரால் வர முடியவில்லை என, சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் கூறியுள்ளார்.

எனினும், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டே அன்வார் அந்நிகழ்வைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!