KLIA Aerotrain: மே இறுதிக்குள் 24 மணி சேவை – அந்தோணி லோக்

செப்பாங், மே-5-KLIA Aerotrain இரயில் சேவை, இம்மாத இறுதிக்குள் மீண்டும் 24 மணிநேரமும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தின் 2 முனையங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த Aerotrain சேவை, தற்போது பராமரிப்புப் பணிகளுக்காக இரவில் சில மணிநேரங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்துத் தொழில்நுட்பச் சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான அறிக்கை தற்போது நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான APAD-டிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் இறுதி ஆய்வு மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் கிடைத்தவுடன், மே மாத இறுதிக்குள் Aerotrain சேவை முழுமையாகத் தொடங்கும் என்றார் அவர்.
கடந்த 2025 ஜூலை மாதம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த இந்த Aerotrain, இதுவரை சுமார் 7 மில்லியன் பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளது.
இந்நிலையில், 24 மணிநேரச் சேவை மீண்டும் தொடங்குவது விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதோடு, பயணிகளின் பயண நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



