
கோலாலம்பூர், மே-7-முழுமையாக இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு நாட்டில் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல், இறக்குமதி செய்யப்படும் EV வாகனங்கள் குறைந்தது RM200,000 மதிப்பும் 180 கிலோவாட் திறனும் கொண்டிருக்க வேண்டும் என, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI கூறியுள்ளது.
இந்த மாற்றம், இறக்குமதி EV வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கு கடந்த 2025 டிசம்பரில் முடிவடைந்ததையடுத்து அமுலுக்கு வருகிறது.
என்றாலும், நிறுவனங்கள் தங்களிடம் உள்ள இருப்புகள், துறைமுகங்களில் உள்ளவை மற்றும் போக்குவரத்தில் இருக்கும் வாகனங்கள் உள்ளிட்ட மீதமுள்ள கையிருப்புகளை, முந்தைய வரிவிலக்கு விதிமுறைகளின் கீழ் முழுமையாக விற்று முடிக்கும் வரை தொடர்ந்து விற்பனை செய்யலாம் என MITI தெரிவித்துள்ளது.
இப்புபுதிய விதிகள் உள்ளூர் EV தொழில்துறையை மேம்படுத்தவும், தரமான வாகனங்களை மட்டுமே சந்தைக்கு கொண்டு வரவும் உதவும்.
ஆனால், இந்த மாற்றம் காரணமாக EV விலைகள் அதிகரித்து, பொது மக்களுக்கு அது குறைவாக கிடைக்கக்கூடும் என துறை சார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எது எப்படி இருப்பினும் மலேசியாவின் EV கொள்கையில் இது ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.



