ஹம்சா சைனுடினுடன் கைகோர்க்கும் ‘புரட்சி’ இயக்கம்: 12,000 உறுப்பினர்களுடன் புதிய அரசியல் பயணத்திற்குத் தயார்

பெட்டாலிங் ஜெயா, மே-10,
நாடளாவிய நிலையில் 12,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் Puratchi என்ற இந்திய அரசு சாரா இயக்கம், எதிர் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடினுக்குத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவ்வியக்கத்தின் தலைவர் கே. உமாகாந்தன், ஹம்சா தலைமையில் அமையவுள்ள புதிய கட்சி அல்லது Reset இயக்கத்தில் ஒரு பிரிவாக இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இந்தியச் சமூகத்தின் உரிமைகளுக்காகத் தங்களைப் பிரதான அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள இந்தப் புரட்சி இயக்கம் முடிவுச் செய்துள்ளது என்றார் அவர்.
RoS எனப்படும் சங்கப் பதிவிலாகாவின் நடைமுறைகளால் புதிய கட்சி தொடங்குவதற்குப் பதிலாக, ஹம்சாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஓர் அரசியல் அங்கமாகச் செயல்பட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்காக அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்குள் தேசிய அளவிலான மாநாடு ஒன்றைக் கூட்டி, தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை உறுதிப்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.
தான் ஸ்ரீ முஹிடின் யாசினுடன் ஏற்பட்ட பிரச்னையால் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹம்சா, புதிய கட்சி தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் புரட்சி இயக்கத்தின் ஆதரவு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



