
புத்ராஜெயா, மே 12 – லங்காவியில் இன்று பயிற்சி விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தில், அதிலிருந்த பயிற்றுநர் மற்றும் பயிற்சி மாணவி இருவரும் காயமின்றி உயிர்தப்பினர்.
மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையமான CAAM தெரிவித்ததாவது, Diamond Aircraft DA-40 ரக விமானம் காலை 9.54 மணியளவில் லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பயிற்சி பயணத்திற்காக புறப்பட்டது.
எனினும், காலை 10.20 மணியளவில் விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் குவா பகுதியில் உள்ள லங்காவி அரங்கின் ‘Field B’ பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கும்போது விமானத்தின் முன்சக்கரம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், விமானத்தில் இருந்த இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.



