
பெட்டாலிங் ஜெயா, மே-28-1MDB நிதி மோசடியில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நியூயார்க் நகரிலுள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை தெரிவித்ததாவது, தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோவின் (Jho Low) தனிப்பட்ட உதவியாளர் கேதரின் டானுக்காக அந்த வீடு வாங்கப்பட்டதாகவும், அதன் வாடகை வருமானத்தையும் அவர் பெற்றதாகவும் கூறியது.
இந்த வழக்கு மூலம் 1MDB நிதி மோசடியில் தொடர்புடைய சுமார் 23.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை மீட்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.
அமெரிக்க நீதித்துறை, மலேசிய மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய 1MDB நிதி, ஜோ லோ மற்றும் அவரது கூட்டாளர்களால் ஆடம்பர வீடுகள், சூப்பர் யாட், ஓவியங்கள் மற்றும் வணிக முதலீடுகளுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தது.
ஜோ லோ மீது அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஊழல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.



