
பார்சிலோனா, ஜூன்-12- 144 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகப் புகழ்பெற்ற சாக்ரடா ஃபமிலியா (Sagrada Familia) பேராலயத்தின் முக்கிய கட்டமைப்பும் அதிகபட்ச உயரமும் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, 267-வது போப் லியோ ( Pope Leo), புதிய இயேசு கிறிஸ்து கோபுரத்தை ஆசீர்வதித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இசை, ஒளிக் காட்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
172.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த புதிய கோபுரம், சாக்ரடா ஃபமிலியாவை உலகின் உயரமான தேவாலயமாக மாற்றியுள்ளது.
புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் அந்தோனி கௌடி (Antoni Gaudí) வடிவமைத்த இந்த பேராலயத்தின் கட்டுமானம் 1882ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கௌடி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த பிரம்மாண்ட படைப்புக்காக அர்ப்பணித்தார்.
எனினும், பேராலயம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. கலை அலங்காரங்கள், சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் முக்கிய நுழைவாயில் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் முடிந்த பின்னரே திட்டம் முழுமை பெறும்.
இப்பணிகள் 2034 முதல் 2036ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



