
கோலாலம்பூர், ஜூன்-13-கோலாலம்பூரில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக, தான் ஓர் இஸ்ரேலியர் எனக் கூறிக்கொண்ட வெளிநாட்டு பெண் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
’Malaysian Protest 4 Palestine’ என்ற மக்கள் இயக்கம் இன்ஸ்டகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், அந்தப் பெண்ணுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவது பதிவாகி, அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அவ்வீடியோவில் அவர் தன்னை இஸ்ரேலியர் என அடையாளப்படுத்திய போதிலும், பிரிட்டன் குடிமகள் என்றும் உரிமைக் கோரியதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Sazalee Adam தெரிவித்தார்.
கைதுச் செய்யப்பட்டபோது அவரிடம் எந்தவோர் அடையாள ஆவணங்களும் இல்லாததால், அவரது உண்மையான குடியுரிமை மற்றும் குடிநுழைவு நிலையை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மேல் விசாரணைக்காகக் அப்பெண் இன்று முதல் தடுத்து வைக்கப்படுகிறார்.



