
காஜாங், ஜூன்-14 – காஜாங் சில்க் (Kajang Silk) நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் லாரி ஓட்டியதுடன், பிற வாகனமோட்டிகளை நோக்கி ஆபாச சைகை காட்டிய 35 வயது லாரி ஓட்டுநரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் பண்டார் பாரு பாங்கி நோக்கிச் சென்ற லாரி ஒன்று, பிற வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டது.
மேலும், அதன் ஓட்டுநர் ஆபாசமான சைகைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த முழுச் சம்பவமும் சக வாகனமோட்டியால் கேமராவில் பதிவுச் செய்யப்பட்டு, டிக் டோக்கில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், காஜாங் போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, அந்த 35 வயது லாரி ஓட்டுநரைக் கைதுச் செய்தனர்.
கைதுச் செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் மீது பொது வழியில் பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாகவும் ஆபத்தாகவும் வாகனத்தை ஓட்டியதாகவும், ஒரு நபரின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் ஆபாச சைகை காட்டியதற்காகவும் போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைகளில் இதுபோன்ற அநாகரீகமான மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.



